நெல்லை: அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நடைபெற்ற விபத்தில் பாறை இடிபாடுகளில் அப்பாவி தொழிலாளர்கள் 6 பேர் மாட்டிக்கொண்டனர். இந்த விபத்தில் இதுவரை 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஒருவரான லாரி டிரைவர் ராஜேந்திரனை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் வீடுகளில் இன்று(மே19) போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நாங்குநேரி ஏடிஎஸ்பி ராஜா சதுர்வேதி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், செல்வராஜ் மற்றும் அவரது மகன் வீடுகளில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து நடைபெற்ற குவாரியில் இயங்கிவரும் அலுவலகத்தை சோதனை செய்வதற்காக ஏடிஎஸ்பி தலைமையில் போலீசார் இன்று அங்கு சென்றனர். ஆனால் அலுவலகம் பூட்டி இருந்ததால் போலீசார் அதிரடியாக பூட்டை உடைத்து, உள்ளே சென்று அங்கு உள்ள ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குவாரியில் ஆரம்பம் முதல் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக உரிமத்தில் வழங்கப்பட்ட அளவைவிட கூடுதல் அளவு பாறைகள் தோண்டப்பட்டதாலேயே விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனவே, என்னென்ன விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. விதிமீறி சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
ஏற்கெனவே குவாரி உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசாரின் இந்த சோதனைக்கு பிறகு அவர்கள் இருவர் மீதும் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரைவில் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. நெல்லை கல்குவாரி விபத்து குறித்து விசாரிக்க சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருக்கும் குவாரி உரிமையாளரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து மீட்புப்பணியில் தாமதம்... காரணம் என்ன..?