திருநெல்வேலி: பாளையங்கோட்டை கிருஷ்ணாபுரத்தில் மாவட்ட காவல் துறை அலுவலர்களின் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நேற்று(அக் .9) நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன்விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் சக காவலர்களுடன் எஸ்பி மணிவண்ணன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நீதிமன்ற அலுவல்கள், பல்வேறு அலுவல் விஷயங்கள் குறித்தும் ஆய்வு நடத்தினார். குறிப்பாக, பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து காவல்துறையின் சேவையை மேலும் மேம்படுத்த வேண்டும் என எஸ்பி அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தின் இறுதியில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 30 பேருக்கு எஸ்பி வெகுமதி வழங்கி பாராட்டினார்.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்புராஜூ, அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு அலுவலர்களின் வாகனங்களை எஸ்பி ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காவலர்கள் நேரில் சென்று விசாரணை!