திருநெல்வேலி: முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலச்செவல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் என்ற அப்பாதுரை. 65 வயதான இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். மேலச்செவல் அருகே வெள்ள நீர் கால்வாய் பணிகள் நடைபெறும் பகுதியில் விஜயகுமார், ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், விஜயகுமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.
தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற முன்னீர்பள்ளம் காவல் துறையினர், விஜயகுமாரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கொலை நடந்த பகுதியில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் சேரன்மகாதேவி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை செய்து விட்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொலைக்குப் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக பிரமுகர் கொலை உள்பட இருபதுக்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ள நிலையில், சில நாள்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விசாரணை வளையத்தில் சிக்கிய தி.நகர் சத்யா.. வழக்கில் சிக்கியதன் பின்னணி என்ன?