திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழுஊரடங்கு பிறப்பித்தும், அதனை சற்றும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகள் வெளியே சுற்றித் திரிகின்றனர்.
தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் நேற்று முன்தினம் (மே.17) எச்சரித்திருந்தார். இதையடுத்து நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்று (மே.18) சாலை நடுவே தடுப்புகள் அமைத்து காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அத்தியாவசியத் தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசன் கடுமையாக எச்சரித்தார். அவரது உத்தரவின் பேரில் 13 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக, ஏதேனும் ஐந்து திருக்குறளை எழுதும்படியும் வாகன ஓட்டிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அதன்படி வாகன ஓட்டிகள் தங்களுக்கு தெரிந்த ஐந்து திருக்குறள்களை எழுதி காவலர்களிடம் கொடுத்தனர்.
திருக்குறள் தெரியாத சில இளைஞர்கள் அலைபேசியில் திருக்குறளை தேடி கண்டுபிடித்து மனப்பாடம் செய்து எழுதி கொடுத்தனர். அதன்பிறகே வாகன ஓட்டிகளை அங்கிருந்து செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர்.
மனப்பாடம் செய்து திருக்குறள் எழுத சொல்கிறார்கள் என கேள்விப்பட்ட பலர் நண்பர்கள் முன்னே அவமானப்பட்டு விடுவோமோ என எண்ணினர். இதனால் தேவையின்றி வெளியே சுற்றுவதையும் பலர் தவிர்த்தனர்.
விதியை மீறிய வாகன ஓட்டிகளை திருக்குறள் எழுத வைத்து, நூதன தண்டனை வழங்கிய காவலர்களின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : 'கண்ணீர் அஞ்சலி' - அட்ரஸ் இல்லாத போஸ்டர் உங்களுக்கானதா..?