ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஜுல் ரெட்டி. கட்டுமானத் தொழில் செய்து வரும் அவரிடம் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, சுங்கத் துறையில் பிடிபட்ட சுமார் ஒரு கிலோ தங்கத்தை 30 லட்சம் ரூபாய்க்கு தருவதாக கூறி சென்னை வருமாறு அழைத்துள்ளனா்.
அதன் பேரில் சென்னை மீனம்பாக்கம் வந்த தொழிலதிபர் ராம்ஜுல் ரெட்டியை எட்டு பேர் கொண்ட கும்பல் முதலில் ரூ. 30 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அதை அவர் தர மறுக்கவே அவரை அங்கிருந்து காரில் நெல்லைக்கு கடத்தி சென்றனர்.
அப்போது, நெல்லை மாவட்டம் சேர்ந்தமரம் ஊருக்குள் வருகையில் காரிலிருந்த ராம்ஜுல்ரெட்டி சத்தம்போட்டு அலறியுள்ளார். இதனைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் காரை மறித்தனர். இதைத் தொடர்ந்து காரிலிருந்த அந்த கடத்தல் கும்பல் உடனடியாக இறங்கி தப்பியோடினர்.
பின்னர், தகவல் கிடைத்து அங்கு வந்த காவல் துறையினர் காருடன் தொழிலதிபரை மீட்டனா். மேலும் தப்பியோடிய கும்பலை விரட்டிச் சென்றபோது அதில் ஆட்கொண்டார்குளத்தைச் சேர்ந்த வசந்தகுமார், செந்தட்டி பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராம்ஜூல் ரெட்டியை 30 லட்சம் பணம் கேட்டு அவர் வந்த காரிலேயே கடந்தி வந்தோம். அவரிடம் முதற்கட்டமாக 40 ஆயிரம் ரூபாய் பணம் மட்டும் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, வசந்தகுமார், முத்துக்குமார் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களை தென்காசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து ராம்ஜுல் ரெட்டி அளித்த புகாரின் பேரில் மேலும் 6 பேரை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.