தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடியில் கடந்த மாதம் 2ஆம் தேதி ஓய்வு பெற்ற காவலர் வீட்டில், கழிவு நீர் அகற்றும் போது விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில் 3 பேர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த 4 பேரின் குடும்பத்துக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த மாதம் 4ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையை வழங்கினார்.
இந்தச் சூழ்நிலையில் அரசு அறிவித்தபடி முழுமையான நிவாரணத்தொகை கிடைக்கவில்லை என்றும் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரி; வனவேங்கைகள் கட்சியின் சார்பில் இன்று(ஆகஸ் 6) திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அக்கட்சியின் மாநிலத் தலைவர் இரணியன் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் நேரில் வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து விட்டுச் சென்றனர்.