திருநெல்வேலி: சமீபத்தில் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் சார்பில் நிவாரண உதவி வழங்க, விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, இன்று (டிச.30) நெல்லை கேடிசி நகர் மாதா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட 1,500 பேருக்கு நிவாரண உதவிகளை அவரே வழங்கினார்.
பின்னர், பிற்பகல் 3 மணியளவில் அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கிவிட்டு, நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டு, தனி விமானம் மூலம் சென்னை சென்றார். இது குறித்து நிவாரண உதவிகளைப் பெற்ற பொதுமக்கள் கூறுகையில், "நடிகர் விஜய் அண்ணா, எங்களுக்காக நேரில் வந்திருக்கிறார். அவர் நேரில் வந்து எங்களுக்கு உதவியது மகிழ்ச்சியாக உள்ளது.
அரசியலில் இருக்கும் நபர்கள்கூட இது போன்று பக்கத்தில் சென்று உதவி செய்ய யோசிப்பார்கள். ஆனால் நடிகர் விஜய், கரோனா அச்சத்தைக் கடந்து, இந்த கூட்ட நெரிசலுக்குள் பக்கத்தில் சென்று, நிவாரண உதவிகளை எங்களுக்கு வழங்கினார். அந்த மனசு, அந்த தைரியம் அனைவரிடத்திலும் வேண்டும். அது அவரிடம் உள்ளது. அவரை பாராட்டுகிறோம், அவரை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். இவர் அரசியலுக்கு வந்தால் மக்கள் மனதில் நிச்சயமாக இடம் பிடிப்பார். மக்களுக்காக கண்டிப்பாக உழைப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது" எனத் தெரிவித்தனர்.
முன்னதாக, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சமீப காலமாக நிவாரணம் மற்றும் உதவிகளை விஜய் வழங்கி வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் தொகுதி வாரியாக முதல் மதிப்பெண்கள் பெற்ற 3 மாணவர்கள் விகிதம் 700க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், சென்னையில் நடைபெற்ற விருது விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
மேலும் அம்மாணவர்களுக்கு நிதி உதவியும் வழங்கி பாராட்டினார், நடிகர் விஜய். அந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களிடையே பணத்துக்காக ஓட்டு போடக் கூடாது போன்ற பல்வேறு கருத்துக்களுடன் அறிவுறுத்தினார். நடிகர் விஜய்யின் இந்த மேடைப்பேச்சினால், நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: 1,500 பேருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய நடிகர் விஜய்.. தூத்துக்குடியில் உயிரிழந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!