திருநெல்வேலி: வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீச்சிருந்தான் குளத்திற்குச் சென்ற செங்கல் சூளை உரிமையாளர் குமாரை, 5 பேர் கொண்ட மர்மகும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர், பண்ணையார் குமார்(வயது40). இவர் சொந்தமாக ஜே.சி.பி, லாரி, செங்கல் சூளை மூலமாக தொழில் செய்து வருகிறார். மேலும் கான்டிராக்டர் தொழிலும் செய்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவியும், கருப்பசாமி, முருகன் என்ற 2 ஆண் குழந்தைகளும், மணிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை (ஆகஸ்ட்.9) இவர் வீரவநல்லூர் ரயில் நிலையம் அருகேயுள்ள வீச்சிருந்தான் குளத்திற்குச் சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல் அவரை ஓடஓட விரட்டிச் சென்று அரிவாளை கொண்டு தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து தகவலறிந்து சென்ற வீரவநல்லூர் போலீசார் குமார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவல் மற்றும் சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான கார்த்திக் (வயது 24) மற்றும் அவரது நண்பர்கள் கண்ணன், முத்துராஜ், வசந்த், கொம்பையா ஆகிய 5 பேரை வீரவநல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில் திருவிழாவில் இவருக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் அதனால் பழிவாங்கும் நோக்கில் கொலை நடந்ததா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
கொலையின் பின்னணி என்ன?
கொலைச் சம்பவம் குறித்து ஐந்து பேர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் பல பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கூலிவேலை செய்து வரும் கார்த்திக்கிற்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்த நிலையில் பெண் வீட்டார் கார்த்திக் குறித்து ஊருக்குள் விசாரித்துள்ளனர். அப்போது குமாரிடமும் விசாரித்துள்ளனர். அதற்கு குமார் கார்த்திக் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும்; திருமணம் செய்தால் உங்கள் மகளின் வாழ்க்கை சீரழிந்து விடும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.
குமார், வீரவநல்லூர் பகுதியில் நடைபெறும் பல்வேறு குற்றங்கள் குறித்த தகவல்களை போலீசாருக்கும் தெரியப்படுத்தி வந்துள்ளார். மேலும் பெண் வீட்டாரிடம் தன்னைப்பற்றி தவறாக கூறியதால் குமாரின் மீது கார்த்திக் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்தும் குமார் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் நண்பர்களுடன் சேர்ந்து குமாரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். திட்டமிட்டபடி குமாரை பின்தொடர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது'' என்று போலீசார் கூறினர்.
இதையும் படிங்க: குதிரை கடித்ததில் மூவர் படுகாயம்: பொதுமக்கள் துரத்திச் சென்றதில் கீழே விழுந்த குதிரை உயிரிழப்பு!