நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக தனது தேர்தல் பரப்புரையை தொடர்ந்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஜெயலலிதா ஆட்சியின் போது கொண்டுவந்த திட்டம் அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டி கொடுத்து வருகிறோம். இதனால் பெண்கள் தற்போது இருசக்கர வாகனம் ஓட்டுகின்றனர். இதன் மூலம் ஆண்-பெண் சமம் என்ற பெரியார் கண்ட கனவினை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொய்க்கு மேல் பொய் சொல்லி வருகிறார். எங்களைப் பார்த்து 'கடந்த எட்டாண்டு ஆட்சி காலத்தில் என்ன செய்தீர்கள்' என்று கேட்கிறார். கலைஞரின் ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் மின்சார தட்டுப்பாடு பெருமளவில் இருந்தது. ஆனால் ஜெயலலிதா ஆட்சி தொடங்கிய ஒரு வருடத்தில் மின் தடையை நீக்கி 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்கினார்.
ஸ்டாலின் தான் முதல்வர் ஆகவேண்டும் என்று கனவு கண்டு வருகிறார். ஆனால் அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. ஸ்டாலின் முதல்வர் பதவிக்கு சரிப்பட்டு வர மாட்டார். மேலும், கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தார். எனவே தான் தேர்தலின்போது தேர்தல் செலவிற்காக கம்யூனிஸ்ட்களுக்கு 40 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
அன்று ஜெயலலிதா ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நல்லெண்ணத்தின் அடிப்படையில் ராஜ்யசபா உறுப்பினர் பதவி கொடுத்தார். ஆனால் இன்று சேராதவர்கள் கூட சேர்ந்து அவமானப்பட்டு மக்கள் முன்பு பேச முடியாத நிலை கம்யூனிஸ்ட்கட்சிக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது " என்றார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் ஏன் பெரியார் தேவைப்படுகிறார்? - கி. வீரமணி பதில்