திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த பரப்பாடி பகுதியிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் சென்ற ரூபி மனோகரனை உள்ளூர் காங்கிரஸ் பிரமுகரான ராஜாசிங் தனது ஆதரவாளர்களுடன் சென்று தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரிடையே சமாதானம் செய்ய காவல் துறையினர் முயன்றும் முடியாமல்போனது. இருதரப்பும் பொது இடத்தில் வாக்குவாதம்செய்யும் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்படுகிறது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூபி மனோகரனுக்கு எதிர்ப்பு ஏன்?
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் தோல்வியடைந்தார். இருப்பினும், எதிர்வரும் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட முனைப்புடன் செயல்பட்டுவருகிறார்.
நாங்குநேரி தொகுதியில் பல ஆண்டுகளாக வெளியூர் நபர்கள் போட்டியிட்டுவருவதால், தங்களுக்குப் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாகவும், உள்ளூர் பிரமுகர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஏமாற்றப்படுவதாகவும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
மேலும், ரூபி மனோகரன் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற நெல்லை மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலத் தலைமை ரூபி மனோகரனுக்கு நாங்குநேரி தொகுதியில் போட்டியிட சீட் வழங்கக் கூடாது எனத் தீர்மானம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'முதலமைச்சர் யார் என்பதை முடிவுசெய்வது மக்கள்தான்' - ஜான்பாண்டியன்