திருநெல்வேலி: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஆணைப்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்துக்கேட்புக் கூட்டம், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து இன்று (மார்ச் 7) நடைபெற்றது.
இந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் நீதிமன்றம் மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்களான குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சுகி சிவம் உள்ளிட்டோர் கருத்துகளை கேட்க மேடையில் அமர்ந்திருந்தனர். இந்த கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்வதற்காக வந்திருந்தனர்.
இந்த நிலையில் கூட்டம் தொடங்கிய உடன் சிலர் மேடை அருகில் சென்று, இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கருத்து கேட்புக்கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனரில் இந்துக்கடவுள் படம் இடம் பெறவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினரும், இந்துக்கடவுள் படத்தை வைக்கக்கோரி கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு, இந்து அமைப்பினருக்கு எதிராகப் பேசியுள்ளார். இதன் காரணமாக இரு தரப்பினரிடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு அனைவரும் மேடை அருகில் நின்று கூச்சல் போட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் தலைமையிலான காவல் துறையினர், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்காத இந்து அமைப்பினர், மேடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேடையில், இருந்த நீதிமன்ற கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்ட பிறகும், அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இந்து அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று மேடையில் வைக்கப்பட்டுள்ள பேனரில் கடவுள் படம் மாற்றப்பட்டது. இதனிடையே வாக்குவாதம் காரணமாக கருத்து கேட்புக்கூட்டத்தை பாதியில் முடித்துக்கொள்வதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துகளைத் தபால் மூலமாக இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறும் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அறிவித்தார்.
ஆனால், ஒவ்வொருவரையும் சமாதானப்படுத்திய காவல் துறையினர், அவர்களை மண்டபத்தை விட்டு அனுப்பி வைத்தனர். அதேநேரம் அனைவரும் தங்களது கருத்துகளை அதற்கு உரிய படிவத்தில் எழுதி, அதனை குழுவினரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மணலூர் மாரியம்மன் சைக்கிளில் பயணம்; பக்தியிலும் பகடி!