நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சர்வதேச மனித வணிகம் மற்றும் மனித கடத்தல் ஒழிப்பு தின விழிப்புணர்வு பிரசாரம், கொத்தடிமை முறை ஒழிப்பு பயிற்சி, அதற்குரிய சட்டத்திற்கான பயன்கள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட நீதிபதி நஷீர் அகமது, மனித கடத்தல் என்பது மிகப் பெரிய வியாபாரம் ஆகிவிட்டது. பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவது மட்டுமே மனித கடத்தல் அல்ல. குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்துதல், அவர்களது உழைப்பை சுரண்டுதல் உள்ளிட்டவைகளும் மனித கடத்தலே என்றார்.
மேலும், இதற்கான ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் காவல்துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் நடைபெறும் மனித கடத்தல், கொத்தடிமை முறை உள்ளிட்டவைகளை கண்காணிப்பர்.
பொதுமக்கள் இது போன்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வோடு இருப்பதோடு இதுகுறித்த தகவல்களை குழுவினரிடம் தெரிவிக்க வேண்டும். இந்தியாவிலேயே நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக "one stop crisis team" ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரை இதில் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை, இனி வரும் காலங்களில் இந்த குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள், இதன் மூலம் பள்ளி கல்வியில் இடை நிற்றலை தவிர்க்க முடியும், மேலும் கொத்தடிமை முறையை ஒழிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.