நெல்லை: திமுக சமீபத்தில் ஆன்லைன் மூலம் கட்சியில் சேரலாம் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் பலர் திமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
நெல்லையில் மட்டும் ஆன்லைன் மூலம் 1 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளதாக நெல்லை திமுக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய திமுகவின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன், "நெல்லை, தென்காசி மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு திமுகவில் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு தலா இரண்டு புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
தற்போது, திமுகவில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 20லட்சம் பேர் திமுகவில் ஆன்லைன் மூலம் இணைந்துள்ளனர். அதில், நெல்லை கிழக்கு மாவட்டத்தில் இருந்து மட்டும் ஒரு லட்சம் பேர் திமுகவில் ஆன்லைன் மூலம் புதிதாக இணைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் ஆட்சியின் மீது மக்கள் எந்தளவு வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசும் ஒரு தரப்பைச் சார்ந்து செயல்படுகிறது. தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருந்துவருகிறது. மேலும், தமிழர்களுக்கு விரோதமான அரசை எடப்பாடி பழனிசாமி நடத்திவருகிறார். இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக மக்கள் தாமாக முன்வந்து திமுகவில் இணைகின்றனர். தொடர்ந்து பலர் திமுகவில் இணையவுள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: ”பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” - அமைச்சர் செங்கோட்டையன்