திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையிலிருந்து பாளையங்கோட்டை செல்லும் வழியில் திரு வெங்கடேஸ்வரா என்ற பெயரில் பெட்ரோல் சேமிப்பு நிலையம் இயங்கிவருகிறது. இங்கு இன்று (அக்.,10) அதிகாலை இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் மறுத்ததால் கத்தியால் அந்த இளைஞர்கள் தாக்கி உள்ளனர்.
இந்தத் தாக்குதலில் அங்கு பணிபுரியும் ரவிச்சந்திரன் (46), சுப்பையா (55) ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் பெட்ரோல் போடுவதற்காகச் சில வாகன ஓட்டிகள் வந்ததையடுத்து இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து, கத்தி குத்தில் காயமடைந்த இருவரையும் சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதற்கிடையில் தகவலறிந்த பாளையங்கோட்டை காவல் துறையினர் தப்பி ஓடிய இளைஞர்களைப் பிடிப்பதற்காக பாளையங்கோட்டை, நெல்லை டவுன் ஜங்ஷன் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வண்ணாரப்பேட்டை வழியாக தப்பி ஓடிய இளைஞர் ஒருவர் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டார்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், நெல்லை பேட்டை மயிலாப்பபூரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் தங்கதுரை (17) என்பது தெரியவந்தது. இவரைத் தவிர 2 பேர் வேறு வழியாக தப்பி ஓடிவிட்டதாக தங்கத்துரை காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தப்பியோடிய 2 பேரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:கோபியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய ஐவர் கைது!