திருநெல்வேலி: நெல்லை டவுனைச் சேர்ந்தவர் சிஷாந்த் (40). இவர் திருநெல்வேலியில் நகைக் கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று (மே 30) காலை நகைகள் வாங்குவதற்காக கேரள மாநிலம் நெய்யாற்றங்கரைக்கு தனது காரில் விஷாந்த் என்ற உதவியாளர் உடன் சென்றுள்ளார்.
அப்போது நெல்லையில் இருந்து இவர்கள் பயணித்த காரைத் தொடர்ந்து முன்னும், பின்னும் இரண்டு கார்கள் வந்துள்ளன. நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் கார் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இரு கார்களிலும் வந்த முகமூடி கும்பல் சிஷாந்தின் காரை வழி மறித்து நிறுத்தி உள்ளது.
இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் இருவர் மீது மிளகாய் பொடி தூவி கம்பியால் தாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைத்த கும்பல், அதில் இருந்த 1.5 கோடி ரூபாயை திருட முயற்சி செய்துள்ளனர். ஆனால், அப்போது அந்த வழியே வந்த தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணிகள் ஆகியோர் சேர்ந்து கொள்ளையர்களை விரட்டி உள்ளனர். இதனால் சுதாரித்துக் கொண்ட முகமூடி கொள்ளையர்கள், சிஷாந்தை தாங்கள் வந்த காரில் தூக்கிப் போட்டு அவரது காரையும் கடத்திச் சென்று உள்ளனர்.
பின்னர், சிறிது தூரம் சென்றதும் சிஷாந்தை நடுவழியில் இறக்கி விட்ட அந்த கும்பல், நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. தொடர்ந்து சென்றால் நாங்குநேரி சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமராவில் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த கொள்ளையர்கள், சுங்கச்சாவடிக்கு முன்பு உள்ள நெடுங்குளம் தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அங்குள்ள குளத்தின் கரை ஓரம் சிஷாந்தின் காரை நிறுத்தி, அதில் இருந்த பணக் கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றி உள்ளனர். பின்னர், சிஷாந்தின் காரை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். மேலும், இது குறித்து அப்பகுதி மக்கள் நாங்குநேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடைய கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த சிஷாந்த், நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்த பின்னரே காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் மூன்றடைப்பு காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஆகியோர் சிஷாந்திடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கொள்ளையடிக்கப்பட்ட பணம் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இதனால், கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஒருவேளை கருப்பு பணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடிய கொள்ளையர்களையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கென்ய பெண்களை வைத்து பாலியல் தொழில் - சென்னையில் இருவர் கைது