தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. அதேபோல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இரு கரைகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையையொட்டி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மழை பாதிப்பு ஏற்பட்டால் பொது மக்களை பாதுகாக்கும் வகையில் முகாம்கள் அமைக்க 188 அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலோர பகுதிகளில் 7 உயர் சிறப்பு முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ள பாதிப்பு குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கும் 046622501012, 04622500191 என்ற தொலைபேசியிலும் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம். நெல்லை மாவட்டம் முழுவதும் பொதுப்பணித்துறையின் கீழ் 726 குளங்கள் உள்ளன.
இதில் தற்போது வரை 135 குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம் சேர்வலாறு அணைகளில் 71% நீர் இருப்பு உள்ளது.
இதேபோல் மணிமுத்தாறு அணையில் 51% நீர் இருப்பு உள்ளது. இன்று வரை சராசரியாக மாவட்டத்தில் 61 மிமீ மழை பதிவாகியுள்ளது. இருப்பினும் நெல்லை மாவட்டத்தில் தற்போதைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் இல்லை, பொதுமக்கள் யாறும் அச்சப்பட வேண்டாம்” என்றார்.