இந்த மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் அரசியல் களம் சுடுபிடித்துள்ளது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணாபுரம்,சிவந்திபட்டி, நொச்சிகுளம் ஆகிய பகுதிகளில் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணைப் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், நடக்கின்ற அதிமுக ஆட்சியில் பல கிராமங்களில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு ஏராளமான குறைகள் உள்ளது. கடந்த தேர்தலில் ஒரு சதவீத ஓட்டு கூடுதலாக பெற்றதால் அதிமுகவினர் ஆட்சியில் உள்ளனர். முதலில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது எனக்கூறிய ஓபிஎஸ், பிறகு அவர்களுடனே சேர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் இருந்துள்ளனர் அவர்களது மரணத்தில் சந்தேகம் வரவில்லை, ஆனால் ஜெயலலிதா மரணத்தில் மட்டும் சந்தேகம் எழுந்தது, இதனை திமுகவினர் சொல்லவில்லை அதிமுகவினரே கூறிவருகின்றனர்.
தற்போது நடக்கும் ஆட்சியில் பொதுப்பணித்துறை முதல் உள்ளாட்சித்துறை என அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. மேலும் பொள்ளாச்சியில் துணை சபாநாயகர் மகன் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களில் ஈடுபட்டுள்ளார் என குடற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதுகுறித்து எந்த ஒரு விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே உள்ளது என்றார்.