திருநெல்வேலி உட்பட மூன்று மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வேளை உணவு, சத்தான பழங்கள் வழங்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகிறார், நெல்லையைச் சேர்ந்த நிஜாம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மறுபுறம் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து நாளுக்கு நாள் வீடு திரும்பி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 63 பேர், அம்மாவட்ட அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு மருத்துவர்கள் சிகிச்சை ஒருபுறம் இருக்க, நெல்லையைச் சேர்ந்த நிஜாம் என்பவரின் சேவையும் இந்த கரோனா வைரஸ் தொற்றை குறைக்கும் பணியில் சேரும். நெல்லை மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ நிஜாம், அக்கட்சித் தலைவர் வைகோவின் பாசத்திற்குரிய நபர் எனப் பெயர் பெற்றவர். அரசியல் கடந்து மக்கள் சேவையில் மிகுந்த நாட்டம் கொண்ட இவரை, செல்லமாக 'நிஜாம் மாமா' என்று அழைத்து வருகின்றனர்.
கரோனா தொற்று காரணமாக வீட்டில் முடங்கி, ஏழ்மையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவி வரும் நிலையில், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வரும் முயற்சியில் இறங்கினார், நிஜாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ளவர்கள் இந்தத் தொற்று நோயை எதிர் கொண்டு விடலாம் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை அரசு தனிமைப்படுத்தி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சத்து நிறைந்த உணவுகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
நெல்லை அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் முதல் நாள் சேர்க்கையிலிருந்து இன்று வரை, அவர்களுக்குத் தினமும் காலை இட்லி, ஆப்பம் தொடங்கி மதியம் மணக்கும் பிரியாணி, இரவு சப்பாத்தி, தோசை எனவும், சத்து நிறைந்த பழங்களையும் வழங்கி வருகிறார், நிஜாம்.
இதுகுறித்து நிஜாம் கூறுகையில், 'நெல்லை, தென்காசி, தூத்துக்குடி என மூன்று மாவட்டங்களிலும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறேன். இந்தச் செயலை தொடர்ந்து சிறப்பாக செய்ய மதிமுக தலைவர் வைகோ அறிவுறுத்தியுள்ளார். கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் வீடு திரும்பும் வரை, இதைத் தொடர்ந்து செய்ய உள்ளேன்' என்கிறார், நம்பிக்கையுடன்...
கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபர் கூறுகையில், 'நாங்கள் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எங்களை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மிகவும் கண்ணியமாக நடத்தினர். எங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கிய நிஜாமுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு முதல்நாள் உணவிலிருந்து கடைசியில் அழைத்துச் செல்லும் வாகனம் வரை தயார் செய்து வருகிறார். அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
இந்த கரோனா வைரஸ் தொற்றை விரட்டி அடிக்க நடைபெறும் போர்க்களத்தில் மருத்துவர்களின் அர்பணிப்பை பாராட்டும் இதே நேரத்தில் மனித நேயத்துடன், அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் நிஜாம் போன்றவர்களும் பாராட்டுக்குரியவர்கள் என்றால் அது மிகையல்ல...!
இதையும் படிங்க: பெண்கள் செய்யும் தவறுகள் தான் கோவிட்-19 தொற்றுக்கு காரணம் - மதகுரு பேச்சால் சர்ச்சை