கரோனா அச்சுறுத்தல் காரணமாக தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில்,புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு தடைவிதித்துள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் நள்ளிரவு புத்தாண்டை முன்னிட்டு கடற்கரையில் கூடுவதற்கோ நட்சத்திர விடுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கோ மாநகர காவல் துறை தடைவிதித்துள்ளது. அதேபோல் இளைஞர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் இருசக்கர வாகனத்தில் ரேஸ் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சென்னையைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல் துறை தடைவிதித்திருக்கிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிப்பதாக அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கரோனா தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு தடைவிதித்துள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்தால் அதன்மூலம் கரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள், கடற்கரைப் பகுதிகள் வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்படுகிறது. இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மாநகர் பகுதியிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் டாமோர் தெரிவித்துள்ளார்.