நெல்லை மாவட்டத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில் ஒடிசா, ஆந்திரா, மும்பை, ஜார்க்கண்ட் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 5,000பேர் இதுவரை சொந்த ஊர் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் சிலர் நேற்று மாலை அவர்கள் குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தங்களுடன் பணிபுரிந்த பலர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும் தங்களை மட்டும் ரயிலில் இடம் இல்லை எனக் கூறி இறக்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஊரடங்கால் கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாமல் தவிப்பதால் உடனடியாக தங்களை சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அலுவலர்களிடம் முறையிட்டனர்.
இவர்களைச் சார்ந்த அனைவருமே அவர்கள் சொந்த ஊர் திரும்பிய நிலையில், திருநெல்வேலியில் அவர்கள் இன்னும் 25 பேர் மட்டுமே ராஜஸ்தான் திரும்ப முடியாமல் குழந்தைகளை வைத்துக்கொண்டு தவிப்பதாக தெரிவிக்கிறார்கள்.
ரயில் போக்குவரத்து இல்லாததால் தங்கள் தொழிலுக்கான பொருள்களும் கொண்டு வரமுடியாத நிலையில் மூன்று மாதங்களாக இருப்பதால் வருமானமின்றி உணவுக்கு பிறரை எதிர்பார்த்தே வாழ்ந்து வர வேண்டியிருக்கிறது என்றும் அதனால் தங்கள் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலத்திற்கு பெரிய மனதுடன் அனுப்பி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: ’வேலையில்லாமல் தவிக்கிறோம்’ - நிவாரணம் வழங்க மர அறுவை தொழிலாளர்கள் கோரிக்கை