நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களைப் பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக பரபரப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி முதற்கட்ட விசாரணை தொடங்கிய நிலையில், நேற்று(ஏப்.17) இரண்டாம் கட்டமாக 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜராகினர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அருண்குமார், கணேசன் மற்றும் இரண்டு சிறார்கள் தரப்பில், மக்கள் கண்காணிப்பக இயக்கத்தின் நிறுவனரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன் நேற்று விசாரணையில் பங்கேற்றார்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஹென்றி திபேன், "இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி நெல்லை மாவட்ட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பொருத்தப்படவில்லை. குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கிடைத்துள்ளது. எனவே, அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் நான் நேரடியாக ஆய்வு செய்ய இருக்கிறேன்" என்று கூறினார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் இன்று(ஏப்.18) அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் தனது உதவியாளர்களுடன் நேரடியாக ஆய்வு செய்தார். காவல் நிலையத்தின் ஆய்வாளர் அறை, வரவேற்பு அறை, கைதிகள் அடைக்கப்படும் அறை, கழிவறை என அனைத்து இடத்திலும் ஆய்வு செய்தார். வழக்கறிஞரின் இந்த திடீர் ஆய்வால் காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை காவல் நிலையத்தில் அலுவல் பணிகள் சாராத இடத்தில் வைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. எனவே காவல் நிலையத்தில் காவலர்கள் உணவு அருந்தும் இடம் உட்பட அனைத்து இடங்களையும் வழக்குறிஞர் ஹென்றி தீபன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட நபர்கள் சார்பில், ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இன்று உச்சநீதிமன்றத்தில் சிசிடிவி கேமராக்கள் தொடர்பான விசாரணை வர இருப்பதால், வழக்கறிஞர் அம்பாசமுத்திரத்தில் ஆய்வு செய்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பார் என கூறப்படுகிறது.