திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 600 முதல் 1000 பேர்வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறனர்.
இந்த இரண்டாவது அலையில் பெரும்பாலானோருக்கு நுரையீரல் பாதிக்கப்படுவதால், அவர்களுக்கு ஆக்ஸிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. நெல்லை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் வசதியுடன் சுமார் 800 படுக்கைகள் மட்டுமே உள்ளன. தற்போது இந்தப் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், கூடுதல் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு கரோனா தொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்துள்ளதால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு ஆக்ஸிஜன் கேட்டு கோரிக்கை அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று (மே.11) நாகர்கோவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த 3 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் உடனடியாக மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவமனை சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டது.
அதுபோல நேற்று இரவும் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.