நெல்லை மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர் கடந்த 15ஆம் தேதி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் காவல்துறை அணிவகுப்பை தலைமை ஏற்று நடத்தினார்.
சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் திண்டுக்கலில் வாழ்ந்துவந்த மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி உயிரிழந்ததாக அறியமுடிகிறது.
இந்த தகவலை கேள்விப்பட்ட பிறகும், அது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் ஆய்வாளர் மகேஸ்வரி சுதந்திர தின விழாவில் அணிவகுப்பை சிறப்பான முறையில் தலைமையேற்று நடத்தி முடித்தார்.
அதன்பிறகே தனது தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டத்திற்கு சென்றார்.
தந்தை இறந்த போதிலும் கடமையை தவறாமல் செய்த பெண் காவல் ஆய்வாளரின் செயல் தமிழ்நாடு முழுவதும் பெரும் பாராட்டை பெற்றது.
இந்நிலையில், ஆய்வாளர் மகேஸ்வரியின் செயலைப் பாராட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர் மகேஸ்வரியை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் இன்று நேரில் அழைத்து அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.