ஒவ்வொரு தந்தைக்கும் தனது மகன் படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது பெருவிருப்பமாய் இருக்கும். தான் கஷ்டப்பட்டாலும் தனது குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் எண்ணுவர். அவ்வாறு, நெல்லையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மாடு மேய்த்து தனது மகனுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துள்ளார். மகனும், நன்றாகப்படித்து ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
மகனின் வாழ்க்கை நல்லபடியாக அமைந்துவிட்டது என எண்ணிய அந்த தகப்பானரின் மகிழ்ச்சி இரண்டு வருடங்கள் கூட நிலைக்கவில்லை. ஆசையாய் வளர்த்த மகன் வெளிநாட்டில் இறந்துவிட்டான் என்ற செய்தியை கேட்டு அந்த விவசாயின் குடும்பமே கண்ணீரில் தவிக்கிறது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பரப்பாடி அருகே ஆனிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாயம் செய்துவருகிறார்.
இவருக்கு வேல்முருகன், மாதவன் என்ற இருமகன்களும், கோமதி, உமா என்ற இரு மகள்களும் உள்ளனர். கடும் கஷ்டத்திலும் முத்துச்சாமி தனது நான்கு பிள்ளைகளையும் நன்றாகப் படிக்கவைத்துள்ளார்.
அந்த வகையில் அவரின் இளையமகன் மாதவன் தெற்கு விஜயநாராயணம் பகுதியிலுள்ள ரெட்(RECT) பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துவிட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஜப்பான் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
ஜப்பான்- இந்தியா நாடுகளின் நல்லுறவை மேம்படுத்துவதற்காக தங்களது மகனுக்கு இந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அப்போதைய ஆட்சியரின் வாழ்த்துகளுடன், மாதவன், சக மாணவர்கள் ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.
மூன்று வருடம் பணி ஒப்பந்தத்தின்கீழ் வேலை பார்த்துவந்த மாதவன், இன்னும் ஓராண்டில் வீடு திரும்பிவிடுவான் என்ற மகிழ்ச்சியில் இருந்த குடும்பத்தினருக்கு பேரிடியாக வந்துள்ளது மாதவன் இறந்த செய்தி.
செப்டம்பர் 1ஆம் தேதி ஜப்பானிலிருந்து வாட்ஸ்அப் காணொலி அழைப்பு மூலம் முத்துச்சாமியை தொடர்புகொண்ட நபர், உங்கள் மகன் மாதவன் இறந்துவிட்டார். உங்கள் குல வழக்கப்படி எப்படி அடக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோன அவரது குடும்பத்தினர் மாதவனுக்கு நேர்ந்தது குறித்து அறிய அவர் பயின்ற ரெட் பாலிடெக்னிக் கல்லூரியை தொடர்புகொண்டுள்ளனர். கல்லூரி நிர்வாகம் மாதவனின் நிலை குறித்து எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து முத்துச்சாமி, அவரது குடும்பத்தினர் மாதவனின் உடலை மீட்டுத்தரக்கோரியும், ஜப்பானில் மாதவனுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளவேண்டியும் கடந்த 2ஆம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆனால், மனுவுக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியரும் முத்துச்சாமியின் குடும்பத்தினரை நேரில் சந்திக்காமல் தட்டிக்கழித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து தனது மகனின் உடலை மீட்டுத்தரக்கோரி முறையிட்டனர். கடும் போராட்டத்திற்குப் பிறகு முத்துச்சாமியின் மனுவை மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பிவைத்துள்ளது.
இதற்கிடையில் தனது மகன் உயிரிழந்துவிட்ட செய்தியை தொலைபேசி வாயிலாக மட்டுமே கேட்டு தெரிந்துகொண்டதாகவும் ஆதாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று முத்துச்சாமி தெரிவிக்கிறார்.
கல்லூரி நிர்வாகமும், ஜப்பான் தனியார் நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு மாணவர்களைப் பயன்படுத்தி சில மோசடியில் ஈடுபட்டதாகவும், அதைத் தெரிந்துகொண்ட மாதவன் தனியார் நிறுவனத்திடம் தங்களுக்கு நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்டதால் அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது.
மாதவன் கடந்த 31ஆம் தேதி தன்னைத் தொடர்புகொண்டு, "இங்கே சூழ்நிலை சரியில்லை. என்னை ஊருக்கு அனுப்பமாட்டார்கள். நான் ஊருக்கு வரமாட்டேன் அப்பா" என தெரிவித்ததாக முத்துச்சாமி தெரிவிக்கிறார்.
மாதவனுக்கு அங்கே என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரியாமல் தவிக்கும் அவரின் குடும்பத்தினர், மாதவன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்கின்றனர்.
இரண்டு வருடங்கள் மாதவனைப்பார்க்காமல் இருந்தோம், தற்போது அவன் உயிரிழந்திருந்தால் அவனது உடலைச் சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாதவன் குடும்பத்தினரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: துபாயில் உயிரிழந்தவரின் உடலை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் கோரிக்கை