கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நெல்லை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், நெல்லையில் கரானா பாதிக்கப்பட்ட நபர் குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். அபுதாபியிலிருந்து மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து நெல்லை வந்த நபருக்கு கரோனா உறுதியானது தெரியவந்தது. அவர் தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா பாதிக்கப்பட்ட நபருடன் இருந்த மற்ற நபர்களின் பட்டியல், தங்கியிருந்த இடங்கள் உள்ளிட்ட பட்டியல் குறித்து சுகாதாரத் துறை கணக்கெடுத்துவருகிறது. பாதிக்கப்பட்ட நபர் தங்கியிருந்ததாக தெரியவரும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
மாவட்டத்தில் இதுவரை 12 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் ஒருவரைத் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளிலிருந்து வந்த நபர்கள் தானாக முன்வந்து தங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 158 பேர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றனர். கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்ய ஐந்து மூத்த அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆட்டோ ஓட்டுநர்களிடம் கரோனா குறித்து விழிப்புணர்வு