திருநெல்வேலி: ராமையன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நேற்று இரவு பெண்கள் மற்றும் குழந்தைகளோடு வட மாநில தொழிலாளர்கள் பரிதவித்தபடி தஞ்சம் அடைந்தனர். செல்லும் திசை தெரியாமல், என்ன செய்வது என்று தெரியாமல், அவர்கள் தவித்த நிலைமையை ராமையன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் டேவிட் பார்த்துள்ளார்.
அதன் பின் உடனே அவர் இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பெயரில் சோயா தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்ட ஆட்சியர் கார்த்திகேயன் உடனடியாக அந்த வட மாநில தொழிலாளர்களை அணுகி விசாரிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன் பேரில் தொண்டு நிறுவனத்தினர் அங்கு சென்று விசாரித்த போது, தாங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் தெரியாத சிலர் தங்களை கேபிள் தோண்டும் பணிக்காக இங்கே வர சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இங்கு வந்த பிறகு அவர்கள் யார்? எங்கே இருக்கிறார்கள்? என்ற தகவல் எதுவும் கிடைக்காத காரணத்தால் எங்கு செல்வது என்று தெரியாமல் பேருந்து நிலையத்தில் பெண்கள் குழந்தைகளோடு தஞ்சம் அடைந்திருப்பதாகவும் வட மாநில தொழிலாளிகள் கண்ணீரோடு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குளு குளு குளியல்.. மவுத்தார்கன் இசை.. திருச்சியில் யானைகள் செய்த சேட்டை வீடியோ!
இதையடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் வட மாநில தொழிலாளர்கள் 19 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும் பசியோடு இருந்த அவர்களுக்கு உணவு, இருப்பிடம் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்களை இங்கே வேலைக்காக அழைத்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று பெயர் பெற்ற நம் மாநிலத்தில் ஒடிசா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உட்பட பல்வேறு வட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டை நம்பி நாள்தோறும் ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேசமயம் சில தீய எண்ணம் கொண்டவர்களால் சமீபத்தில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்தியும் கிளம்பியது.
மேலும் அதன் பெயரில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் வேலைக்கு வந்த இடத்தில் முகவரி தெரியாமல் வட மாநில தொழிலாளர்கள் சாலையில் பரிதவித்து கொண்டிருந்த போது ஊராட்சி மன்ற தலைவர் உதவியோடு ஆட்சியர் அவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்த சம்பவம் நெல்லையில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பட்டையை கிளப்பும் 'மைனரு வேட்டி கட்டி' பாட்டு.. எழுதியவர் யார் தெரியுமா?