நெல்லை மாவட்டம் கொங்கந்தன்பாறை அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (65).இவர் இன்று (செப். 25) தனது மனைவியுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், ”எனக்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள் இருந்த நிலையில் மூத்த மகன் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். இளைய மகன் ஞானதுரை (31) மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்துவந்தார். ஞானதுரைக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை உள்ளது. கடந்த மாதம் 11ஆம் தேதி விடுமுறையில் எனது மகன் வீட்டிற்கு வந்தான்.
பிறகு 13ஆம் தேதி எனது மகனின் நண்பர் ஆரோன் எனது மகன் திருநெல்வேலி ஷிபா கார்டன் சிட்டி பகுதியில் வாங்கிய நிலத்தை பார்வையிட வேண்டும் என்று கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். ஆனால் வீடு திரும்பும் வழியில் இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டு எனது மகன் இறந்துவிட்டதாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால் விபத்தின்போது எனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஆரோன் உடம்பில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. மேலும் விபத்து குறித்து அவர் எனக்கும், எனது உறவினர்களுக்கும் காவல்துறைக்கும் எந்த தகவலும் தரவில்லை.
மேலும் காவல்துறை விசாரித்தபோது விபத்தின் போது நான் ஞான துரையுடன் செல்லவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் விபத்து நடந்து இரண்டு நாள்களுக்குப் பிறகு ஆரோன் தனது உறவினர்களை அழைத்து கிடா வெட்டி விருந்து வைத்துள்ளார்.
எனவே எனது மகன் வாங்கிய நிலம் தொடர்பாக ஆரோன் குடும்பத்தினருக்கு இடையே ஏதேனும் பிரச்னை இருந்து அதன் காரணமாக எனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
எனது மகனின் உடற்கூறாய்வு பரிசோதனை அறிக்கையில் தலையில் பெரும் காயங்களுடன் கண்கள் இல்லாத நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விரிவான விசாரணை நடத்தி எனது மகனின் உயிரிழப்புக்கு நியாயம் பெற்றுத் தர வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் எண்கள் வெளியீடு