நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல்நிலையத்திற்கு நேற்று (பிப்.07) வழக்கு ஒன்றில் கையெழுத்து போடுவதற்காக வந்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவன தலைவர் கண்ணபிரானை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டு வீசி சென்றனர். அதிர்ஷ்டவசமாக ஆள்இல்லாத இடத்தில் குண்டுகள் விழுந்ததால் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக் கோரி தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று (பிப்.08) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், இயக்கத் தலைவர் கண்ணபிரான் உள்பட அனைவரும், நூதன முறையில் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் மாவட்ட ஆட்சியரிடம் சென்று மனு அளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரான் பேசுகையில், ”இந்த சம்பவத்தில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பிரவீன், கார்த்திக், ராஜசேகர் ஆகிய மூன்று பேர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று பேருமே பிரபல ரவுடியான ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள். இவர்கள் தொடர்ந்து தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க இளைஞர்களையும், நிர்வாகிகளையும் குறிவைத்து கொலை செய்து வருகின்றனர். ஏற்கனவே எங்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை இவர்கள் கொலை செய்துள்ளனர். குற்றவாளிகள் ஆறு பேரும் நாங்குநேரி அருகே ஒரு தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றனர். ஆனால் காவல்துறையால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எங்களுக்கு மட்டும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கிறது குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதில் தாக்குதல் நடத்த எங்களுக்கு காவல்துறை சுதந்திரம் அளிக்க வேண்டும் “ என்று கூறினார்.
இதையும் படிங்க: நெல்லையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - கண்ணபிரான் பேட்டியால் புது சர்ச்சை