நெல்லை: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா(NASA), செயற்கை கோள்களின் தரவுகள் மற்றும் அதன் செயல் முறைகளை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் செயல்படும் வகையிலான செயலியை உருவாக்கும் விதமாக நாசா மொபைல் ஆப் சேலஞ்ச்(NASA Mobile App Challenge) என்ற போட்டியை நடத்தியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம், ஆஸ்திரேலிய விண்வெளி ஆராய்சி மையம் உள்ளிட்ட பன்னாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த போட்டியை நடத்தினர். போட்டியில் திருநெல்வேலி அண்ணா பல்கலைகழக வளாகத்தை சேர்ந்த மாணவர் டொமினிக் வால்டர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியில் கல்லூரியை சேர்ந்த குரு பிரசாத் ஆகியோர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷெல்வின் ஜோநாதனுடன் இணைந்து தயாரித்த செயலி அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்தது.
உலக அளவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 162 நாடுகளிலிருந்து 31 ஆயிரத்து 561 மாணவர்கள் 5 ஆயிரத்து 327 குழுக்களாக கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 323 குழுக்களும், தென்னிந்தியாவிலிருந்து 90 குழுக்களும் போட்டியில் கலந்து கொண்டனர், இதில் அண்ணா பல்கலைக்கழக மாணவர் அணி முதலிடத்தை பிடித்தது.
போட்டியின் அடுத்த கட்டமாக உலக அளவிலான மாணவர்களுடன், தமிழக அணி மோத உள்ளது. அகில இந்திய அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் தாங்கள் வடிவமைத்த செயலியின் செயல்முறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் செய்து காட்டினர்.
மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் முன் மெய்நிகர் தொழில்நுட்ப அடிப்படையில் தயாரிக்கப்பட்ட செயலியின் வடிவமைப்பை கொண்டு பாடங்கள் நடத்தி காட்டினர். முதற் கட்டமாக 6-ஆம் வகுப்பு அறிவியல் பாடங்களை செயலியில் பதிவேற்றம் செய்து, முக்கியப் பகுதிகளை முப்பரிமண வடிவில் செய்து காட்டினர். இதன்மூலம் மாணவர்கள் பாடங்களை கண் எதிரே இருப்பது போல உணர்ந்து எளிதாக படிக்க முடியும் என கூறப்படுகிறது.
எடுத்துக்காட்டாக இதயத்தின் செயல்பாடுகள் பற்றி பாடம் படிக்கும் மாணவர்கள் இதயவடிவிலான முப்பரிமாண படத்தை தனது செல்போனில் உள்ள செயலியின் மூலம் தேர்ந்தெடுத்து, இதயத்தை நேரில் பார்ப்பது போன்ற உணர்வுடன் படிக்க முடியும் என்று கூறப்படுகிறது. இனி வருங்காலத்தில் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலம் முப்பரிமாண வடிவில் மாணவர்கள் கல்வி கற்க உதவும் என தெரிவிக்கப்பட்டது.
மெய்நிகர் தொழில்நுட்ப செயலியினை வடிவமைத்த மாணவர்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மாணவர்களை பாராட்டினர். தொடர்ந்து செயலியின் செயல்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
இதையும் படிங்க: "சுதந்திர போராட்டம் என்றால் என்ன என்று பிரிட்டனுக்கு தெரியும்" - பிரதமர் ரிஷி சுனக்