கரோனா பாதிப்பை தடுக்க அரசு விதித்த 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பமும் பட்டினியிலிருந்து மீண்டு உயிர்வாழ குடும்பம் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 40 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கரோனா விழிப்புணர்வு, அரசுத்திட்ட விளம்பர பரப்புரைக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களைப் பயன்படுத்தி சன்மானத் தொகையாக கலைஞர் ஒருவருக்கு தலா ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைக்கும்படி பரப்புரை வாய்ப்பை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் 30க்கும் மேற்பட்டோர் மேளத் தாளத்துடன் வந்து நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர்கள், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கியதற்கு நன்றி கூறிய அவர்கள், நலவாரியத்தில் பதிவு செய்திருந்தும் 60 வயதுக்கு மேற்பட்ட தொழில் செய்ய இயலாத நிலையில் உள்ள மூத்த கலைஞர்கள் 4000 பேருக்கு நிவாரண நிதி கிடைக்கவில்லை, அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும், நாட்டுப்புற நலவாரியத்தில் பதிவு செய்யாமல் கலை பண்பாட்டு துறையில், பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்களின் அடையாள அட்டை பெற்றுள்ள அனைத்து நாட்டுப்புறக் நாடகக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
மேலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உணவுக்கு வழி இல்லாமல் தவித்துவரும் தங்களுக்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.