நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே கிணற்றில் பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சிவந்திபட்டி காவல்துறையினர் அங்கு சென்றனர். பின்னர், பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்து குழந்தையின் உடல் மீட்கப்பட்டது.
அப்போது அந்த குழந்தை பெண் குழந்தை என்பதும் பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிவந்திப்பட்டி காவல் ஆய்வாளர் சாந்தி விசாரணை மேற்கொண்டார். அதில் குழந்தை சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்த வேலம்மாள் (35), பாலசுப்ரமனியன் தம்பதியின் மகள் என்பதும் தெரியவந்தது.
பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையை ஏன் கிணற்றில் வீசி கொலை செய்தனர் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, வேலம்மாள் பாலசுப்ரமணியன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்றது தெரியவந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் வேலம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்ததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன் காரணமாக குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். வேலம்மாள் மீது சிவந்திபட்டி காவல் நிலையத்தில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தொடர்ந்து வேலம்மாளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறுதிக்கட்ட விசாரணைக்கு பிறகு வேலம்மாள் கைது செய்யப்படலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.