திருநெல்வேலி: நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் உள்ள பாரத ஸ்டேட் பேங்க் உடன் இணைந்த ஏடிஎம் அறை உள்ளது. அதில் பணம் கணக்கில் வராமல் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து வங்கி மேலாளர் சந்திப்பு காவல் நிலைய குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது இரண்டு வடமாநில இளைஞர்கள் மோசடி செய்து பணம் எடுத்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹரியானவைச் சேர்ந்த சலீம் உசேன் (25) மற்றும் முபட் (23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இளைஞர்கள் தங்களது ஏடிஎம் கார்டை வைத்து ஏடிஎம்மில் நூதன முறையில் பணத்தை திருடியது தெரியவந்தது.
பணம் வெளியே வரும் சமயம் ஏடிஎம் மிஷினை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, வெளியே வந்த பணம் மீண்டும் கணக்கில் செலுத்தப்பட்டதாக அவர்களுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. மீண்டும் மிஷினை ஆன் செய்து வெளியில் வரும் பணத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். இவ்வாறு பலமுறை இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாரத ஸ்டேட் பேங்க் மேலாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு காவல் துறையினர், சலீம் உசேன் மற்றும் முபட் ஆகிய இருவரையும் கைது செய்து மோசடி செய்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், அவர்களை நீதிமன்ற காவலுக்கு இன்று (செப்.22) காலை அழைத்துச் சென்றபொழுது நீதிமன்றத்திற்கு முன்பு இருந்து கைதிகள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். முன்னணி வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் வட மாநில இளைஞர்கள் நூதன திருட்டில் ஈடுபட்டு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"வளர்ச்சி திட்ட பணிகளில் தொய்வு" - ஓபனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்!