நெல்லை மாவட்டம், நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந்தோப்பு வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவர், வாகன காப்பகத்தில் வேலை பார்த்து அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். அரசின் ஓய்வூதியமாக மாதம் ஆயிரம் ரூபாய் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்பதால் பலமுறை அத்திட்டத்தில் தன்னை இணைக்க விண்ணப்பித்துள்ளார்.
ஆனால் 60 வயது நிரம்பியவர் என்ற முழு தகுதி இருந்தும், இதுவரை அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கப்படவில்லை. இதனால், மனமுடைந்த ஆறுமுகம், நேற்று(ஆக.7) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருவதை அறிந்த அவர், முதலமைச்சரிடமே நேரில் முறையிடலாம் என கையில் மனுவுடன் வந்துள்ளார்.
ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முதியவரை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் முதியவர் ஆறுமுகம் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, மீனாட்சிபுரத்தில் உள்ள அந்த முதியவரின் இல்லத்தைக் கண்டறிந்து, இன்று(ஆக.8) நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்கள் மற்றும் சிறியளவிலான உதவித் தொகையை வழங்கினார்.
வீடு தேடி வந்து உதவிகள் செய்த எம்எல்ஏ இன்பதுரைக்கு முதியவர் ஆறுமுகம் நன்றி தெரிவித்தார். மேலும் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை வைத்தார். ஏதோ பெயரளவுக்கு விளம்பரத்திற்காக மளிகை பொருள்கள் வழங்கியதோடு நின்று விடாமல் எம்எல்ஏ என்ற முறையில் உடனடியாக முதியவர் ஆறுமுகத்துக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.