திருநெல்வேலி: திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மூன்றாவது மகள் சந்தியா (18) இவர் நெல்லை உள்ள கடை ஒன்றில் பணி செய்து வந்தார். நேற்று (அக் 02) வழக்கம் போல் கடைக்குத் தேவையான பொருட்களை அதே பகுதியில் உள்ள குடோனில் இருந்து எடுத்து வருவதற்காக சந்தியா குடோனுக்குச் சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் கடைக்குத் திரும்பாததால் சந்தேகம் அடைந்த சக பெண் ஊழியர்கள் குடோனுக்குச் சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் சந்தியா உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து நெல்லை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த சந்தியாவின் உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன் அடிப்படையில் சந்தியா பணிபுரிந்த கடையின் பக்கத்துக் கடையில் வேலை செய்து வந்த ஒருவர் சந்தியாவை அடிக்கடி பின் தொடர்ந்து தொந்தரவு செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதை அடுத்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவன் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதும் காதல் விவகாரத்தில் சந்தியாவை அச்சிறுவன் கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.
இதன் அடுத்து மேற்கொண்ட விரிவான விசாரணையில், நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன் சந்தியாவுடன் நட்பாகப் பழகி பின்னர் சந்தியாவை காதலித்துள்ளான். முதலில் சந்தியாவும் சிறுவனைக் காதலித்ததாகவும் பின்னர் சில காரணங்களுக்காக சந்தியா அச்சிறுவனுடனான காதலை முறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் மீண்டும் தன்னை காதலிக்கும்படி பலமுறை சந்தியாவிடம் அச்சிறுவன் தொந்தரவு செய்துள்ளான். அதற்கு சந்தியா தனக்கு விருப்பமில்லை என்று கூறியும் விடாமல் வலுக்கட்டாயமாக தன்னை காதலிக்கும் படி அச்சிறுவன் சந்தியாவை துன்புறுத்தியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அச்சிறுவன் சந்தியாவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளான். அதன்படி நேற்று (அக்.02) கத்தியோடு சிறுவன் கடைக்கு வந்துள்ளான் பின்னர் தினமும் சந்தியா குடோனுக்குச் செல்வதை அறிந்திருந்த அச்சிறுவன் வழக்கம் போல் சந்தியா குடோனுக்குச் செல்வதை நோட்டமிட்டு சந்தியாவை பின் தொடர்ந்து அச்சிறுவனும் குடோனுக்குச் சென்றுள்ளான்.
அதன் தொடர்ச்சியாக தான் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து கொலைவெறியோடு சந்தியாவை தாக்கியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சந்தியா சரிந்து அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்த போலீசார், கிராமத்தில் பதுங்கி இருந்த சிறுவனைக் கைது செய்து சிறார் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் அனுமதித்தனர். இச்சம்பவம் நெல்லை மக்களிடையே கடும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ராணிப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது!