தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பிற துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த உதயகுமார் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் சென்னை, விருதுநகர், திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமான மழை பெய்துள்ளது. அதேபோல் வேலூர், தஞ்சாவூர் உள்பட 17 மாவட்டங்களில் இயல்பான அளவும் மேலும் 17 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பெய்துள்ளது.
புரெவி புயல் தற்போது வடக்கு - வடமேற்கு திசையில் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. அதாவது பாம்பனில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை (டிசம்பர் 4) தென் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ள இடங்களில் மொத்தம் 490 நிவாரண முகாம்களில் 2 லட்சம் பேர்வரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் குழுவைச் சேர்ந்த 14 குழுக்கள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மீட்பு பணிக்காக நன்கு பயிற்சி பெற்ற 43 ஆயிரத்து 409 முன் கள பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
புயல் பாதிக்கப்படக்கூடிய மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் புயல் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு வெளியிடும் தகவல்கள் மட்டுமே உறுதியானது. நிவாரண முகாம்களில் கரோனோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.