திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியில் தொடர் சர்ச்சைகள், உட்கட்சி பூசல் நிலவி வரும் சூழலில், நெல்லை மாநகராட்சியின் மேயர் சரவணன் நேற்று கட்சி தலைமையிடம் ராஜினாமா கடிதம் கொடுத்ததாக தகவல் பரவி வந்தன. திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவில், மேயர் சரவணன், மத்திய மாவட்ட செயலாளர் மைதீன்கான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா ஆகியோர் ஒரு அணியாகவும். சட்டமன்ற அப்துல் வகாப் ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதனால் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுகவில் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே மாநகராட்சி மேயர் சரவணனை மாற்ற கோரி அப்துல் வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ஒருங்கிணைப்பு இல்லாமல் பல்வேறு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மேயர் சரவணனும் பல்வேறு ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேயரை மாற்றக்கோரி ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தொடர்ச்சியாக மன்ற கூட்டங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக துணை மேயர் ராஜூ உள்பட 40-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கையெழுத்து போட்டு, மேயரை மாற்றும் படி திமுக கட்சி தலைமைக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பினர்.
இதுபோன்ற சூழ்நிலையில் தான், மேயர் சரவணன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் வழங்கி இருப்பதாகவும், கட்சி தலைமை வற்புறுத்தலால் தான் அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும், நேற்று சர்ச்சைகள் எழுந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் திமுகவின் உள்கட்சி பூசல் குறித்து, திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திருநெல்வேலி அடுத்த சங்கர் நகரில் உள்ள தனியார் பங்களாவில் ஆலோசனை கூட்டம் இன்று (செப் 01) நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி மேயர் சரவணன், துணைமேயர் ராஜு, மாநகராட்சியின் மண்டல சேர்மன்கள், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் டிபிஎம் மைதீன் கான் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தில் நீடித்து வரும் தொடர் குழப்பம், சர்ச்சை, மேயர் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் விரிவான விவாதம் இதில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக மேயருக்கும் எதிர் தரப்புக்கும் உள்ள மோதல்கள் குறித்தும், மேயர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு விரிவாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நெல்லை மேயர் குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.