நெல்லை: மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே பங்கேற்று விட்டு கிளம்பியதாக கூறப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகள் பலரும் கையெழுத்துக்காக பல மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டதாக வேதனைத் தெரிவித்துள்ளனர். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பஞ்சர் ஆகிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டதால், அவர் அங்கிருந்து அதனை வீட்டுக்குக் கொண்டு செல்ல செய்வதறியாது திகைப்புக்குள்ளானார். இது குறித்து அதிகாரிகளும் சரியாக பதிலளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லைக்கு தமிழக நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சரும் அம்மாவட்ட பொறுப்பு அமைச்சருமான தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 28) வருகை தந்தார். தொடர்ந்து நெல்லை மாவட்டம், பாளையஞ்செட்டிகுளம் மற்றும் ரெட்டையார்பட்டியில் பகுதியில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை நேரில் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.11.52 லட்சம் மதிப்பில் 32 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மூன்று சக்கர சைக்கிளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
வழக்கம்போல், ஒரு சில பயனாளிகளுக்கு மட்டும் அமைச்சர் தனது கையால் சாவி வழங்கி, புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதைத்தொடர்ந்து இரண்டாவது மாடியில் கூட்டுறவுத்துறை சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமைச்சர் அங்கு சென்றுவிட்டார்.
அதே சமயம் ஸ்கூட்டர் வழங்குவதற்காக அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு செய்யாததால் அவர்கள் மணிக்கணக்கில் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதாவது, 32 பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டரில் ஒரு ஸ்கூட்டர், முன்பக்க டயர் பஞ்சர் ஆகி இருந்தது. எனவே, அந்த வண்டியை எப்படி வீட்டிற்கு எடுத்துச்செல்வது என்று தெரியாமல் அந்த வண்டியைப் பெற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் திகைத்தார். அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது போகும் வழியில் பஞ்சர் ஒட்டிக் கொள்ளுங்கள் என்று எளிதில் கூறிவிட்டனர்.
ஆனால், நலத்திட்டங்கள் வாங்குவதற்காக ஆட்சியர் அலுவலகம் அழைத்து வரப்பட்ட மாற்றத்தினாளிகளுக்கு அரசு தரப்பில் வாகன வசதி எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. எனவே, பலர் ஏற்கனவே தாங்கள் வைத்திருந்த பழைய மூன்று சக்கர சைக்கிளில் வந்திருந்தனர். இன்று அரசு புதிய வாகனம் கொடுத்ததால் தாங்கள் கொண்டு வந்த வாகனத்தை எவ்வாறு எடுத்துச்செல்வது என்று தெரியாமல் குழம்பியபடி இருந்தனர்.
அதேபோல, அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்ட நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்களில் நடைபெற்று முடிந்துவிட்டது. நலத்திடங்களை வழங்கிவிட்டு சுமார் 15 நிமிடங்களில் அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆனால், அதற்கு முன்பே இரு சக்கர வாகனத்தைப் பெற்ற மாற்றுத்திறனாளிகள் ஒரே ஒரு கையெழுத்து போடுவதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கு மேலாகியும் கையெழுத்து வாங்க யாரும் வராதால் மாற்றுத்திறனாளிகள் வெயிலில் கடும் சிரமத்தோடு காத்திருந்தனர். பின்னர், நீண்ட நேரம் கழித்து கையெழுத்து பெற்ற பிறகு மாற்றுத்திறனாளிகள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
பொதுவாக, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் பெருமைக்காக சிறப்பு விருந்தினர்கள் நலத்திட்டங்களை வழங்கினாலும், அதன் பின்னணியில் பயனாளிகளுக்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து கொடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக, இன்று மாற்றுத்திறனாளிகளை வெயிலில் காத்திருக்க செய்த சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "கோயபல்ஸ்-இன் மொத்த உருவம் மு.க.ஸ்டாலின்" - ஈபிஎஸ் கடும் விமர்சனம்!