திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் ஆணை வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்டம், சங்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தலைமை தாங்கினார். அவருடன் அமைச்சர் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகள் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டேன். ஆனால் அதில் சில சட்ட சிக்கல் ஏற்பட்டது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதனால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. இல்லை என்றால் மூன்று ஆண்டுகள் அனுமதி கிடைத்திருக்கும்.
அதேபோல் நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து கோரிக்கை வைத்தனர். கட்டடம் முறையாகக் கட்டப்பட்டிருந்தால் நர்சரி பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்படும். மெட்ரிக் பள்ளிகளில் கட்டட வசதிகளை முறையாக மேற்கொண்டால் நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள புதிய பாடத்திட்டத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. மத்திய அரசே புதிய பாடத்திட்டத்தை பாராட்டியுள்ளது. நீட் தேர்வு குறித்து எல்லோரும் அச்சப்பட்டனர். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 128 கேள்விகள் நமது பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நீட் தேர்வில் மூன்றாயிரத்து 942 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்த ஆண்டு 15 ஆயிரத்து 497 பேர் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சீட்டுகள் கிடைக்க வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், "அரசு, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் ஏழாயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். 80,000 கரும்பலகை போர்டுகள் அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிகள் திறப்பது குறித்து அரசின் கருத்துக் கேட்புக்கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் பள்ளி நிர்வாகம் சார்பில், அரசின் புதிய பாடத்திட்டத்தை வரவேற்று பாடல் ஒன்று எழுதி இசை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கான குறுந்தகடை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இதையும் படிங்க: சிறு குறு தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - அமைச்சர் பெஞ்சமின்