திருநெல்வேலி: செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்க பணிகளுக்காக விவசாய நிலங்களைத் தமிழக அரசு கையகப்படுத்த நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், போராட்டத்தை முன்னெடுத்த விவசாய இயக்கங்களைச் சேர்ந்த அருள் உட்பட 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்தது. இதற்கு, தமிழக முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அருள் ஆறுமுகம் என்பவரைத் தவிர மீதமுள்ள ஆறு பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
பின்னர், விவசாயி அருள் மட்டும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் 68 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு ரத்து செய்தது.
இதனையடுத்து, இன்று (ஜன.10) அவர் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவரை வரவேற்கத் தமிழக முழுவதும் இருந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த விவசாய நிர்வாகிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் நேரில் வந்திருந்தனர்.
தொடர்ந்து. அவர்கள் விவசாயி அருள் ஆறுமுகத்துக்கு ரோஜா பூ மாலை சந்தன மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாகமுடன் வரவேற்பு அளித்தனர். இது குறித்து ஜாமீனில் வெளியே வந்த விவசாயி அருள் ஆறுமுகம் கூறுகையில்“ மேல்மா சிப்காட் திட்டத்தை எதிர்த்து 125 நாள்கள் அமைதியாகக் காத்திருப்பு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது, காவல்துறையை ஏவி போராட்டத்தை ஒடுக்க நினைத்தது தமிழ்நாடு அரசு. இந்த பிரச்சனைக்கு முழு காரணம் அமைச்சர் எ.வ.வேலு தான் அவர் விவசாயிகளை மதிப்பதே கிடையாது.
இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் போது, விவசாயிகளுக்கு எதிரான எந்த திட்டங்களையும் கொண்டு வர மாட்டோம், அப்படி ஏதேனும் திட்டங்கள் கொண்டு வரப்பட்டால் விவசாய பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவோம் எனக் கூறினார்.
ஆனால், தற்போது ஆளும் கட்சியாகப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடும் அளவிற்குத் துணிந்து விட்டார். விவசாயிகள் நிலங்களைக் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும் இல்லை என்றால் வரும் தேர்தலில் அது பிரதிபலிக்கும். என்ன நடந்தாலும் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யும்வரை தொடர்ந்து போராடுவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கணவர் இறந்து 6 வருசமாச்சு; ஒரு பணப்பலனும் கிடைக்கல.. ரொம்ப கஷ்டப்படுறேன் - ஓட்டுநரின் மனைவி குமுறல்!