பிரபல பேச்சாளரும் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் இன்று(ஆக.18) பிற்பகல் காலமானார். அவரது உடல் நெல்லை டவுனில் உள்ள அம்மன் சன்னதி தெருவில், அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு அவர் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, “தமிழுக்கு புகழ் நெல்லை கண்ணன் தான். சமய சொற்பொழிவு நிகழ்ச்சியாக இருந்தாலும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சியாக இருந்தாலும் பட்டிமன்றமாக இருந்தாலும் நெல்லை கண்ணன் ஈடு இணையற்ற தீரராக இருந்தார்.
நெல்லை என்று சொன்னாலே கண்ணணையும் சேர்த்து சொல்கின்ற அளவுக்கு பலம் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். இந்த வீட்டிற்கு ராஜிவ்காந்தி வந்து, உணவு அருந்தி விட்டு சென்றதாகவும் என்னிடம் தெரிவிப்பார். காமராஜரை தனது அரசியல் வாழ்வில் கொள்கையாகக் கொண்டு காங்கிரஸில் செயல்பட்டவர்.
அவரது இறப்பு என்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமயம், இலக்கியம், பட்டிமன்றம் எதுவாக இருந்தாலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டு ஆற்றல் மிக்கவராக இருப்பார். அரசியலில் அவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பு கிடைக்காமல் சென்றுவிட்டாலும் நெல்லை மாவட்ட மக்களின் மனதில் அவர் ஒருபோதும் மறைவதில்லை. இந்த இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் பெரிய இழப்பாக உள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.