நெல்லை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு மற்றும் கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய கல்விக் கொள்கையில் மாநில அரசின் உரிமையை பறிக்கும் விதமாக பல சரத்துகள் அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் பொறுப்பை இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்திடம் மத்தியஅரசு ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து புதிய கல்விக் கொள்கையை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் மூத்த பேராசிரியர்களை கொண்டு அனைத்து பல்கலை மற்றும் கல்லூரி பேராசிரியர்களுக்கும் பயிற்சி வழங்க இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பான பயிற்சியில் சேர விரும்பும் மூத்த பேராசிரியர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும்படி அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த பயிற்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) தலைவரும் மூத்த பேராசிரியருமான கிருஷ்ணன் தானும் தனது துறை பேராசிரியர்களும் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள மாட்டோம் என திட்டவட்டமாக பதிவாளருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், புதிய கல்வி கொள்கை குறித்த பயிற்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கு எதிரானது. இந்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ஊழியர்களுக்கு தமிழக அரசுதான் சம்பளம் விளங்குகிறது.
எனவே எங்களால் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முடியாது, பயிற்சியில் கலந்து கொண்டால் தமிழக அரசின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக்கப்படுவோம் இதுபோன்று தமிழக அரசின் கொள்கையை மீறிய மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததை நினைவுகூர விரும்புகிறேன்.
எனவே இந்த பயிற்சியில் நான் கலந்துகொள்ள மாட்டேன் எனது துறையை சேர்ந்த பிற பேராசிரியர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் ஒருவேளை தமிழக அரசின் நடவடிக்கை எடுத்தால் யாரும் எங்களை காப்பாற்ற மாட்டார்கள்" என்று கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களுக்கு கலாசார பயிற்சி!