திருநெல்வேலி: பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பெருமாள் (34). இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக கடந்த 12 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, இந்தியப் பொருளாதாரம் பற்றி படித்து வந்த இவர், சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு ஆளுநர் கையால் டாக்டர் பட்டம் பெற்றார். பட்டம் பெற்ற கையோடு, அரவிந்த் பெருமாளுக்கு, நாகர்கோவிலில் உள்ள எஸ்.டி இந்து கல்லூரியில், பேராசிரியர் வேலைக்காண அழைப்பும் வந்தது.
இதையடுத்து கடந்த இரண்டாம் தேதி, மாவட்ட கண்காணிப்பாளரிடம், அரவிந்த் பெருமாள் வாழ்த்து பெற்று, முறைப்படி காவல்துறையிலிருந்து விலகினார். பின்னர் கல்லூரிக்கு பேராசிரியராக சென்றுவிட்டார்.
காவல்துறையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து டாக்டர் பட்டம் பெற்று பேராசிரியர் பதவிக்கு சென்றது பெரும் பாராட்டுக்குரியது.
சுத்தமல்லி காவல் நிலையத்தில் நடந்த பிரிவு உபசார நிகழ்ச்சியில் அவருடன் பணி புரிந்த காவலர்களும், ஆய்வாளர்களும் அவரை வாழ்த்தி வழி அனுப்பிவைத்தனர்.
இவருடைய மனைவி பேச்சியம்மாளும் டாக்டர் பட்டம் பெற்று திருநெல்வேலியில் ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்துக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முடிவடைந்த வேட்பு மனு தாக்கல்: 7ஆம் தேதி வெளிவரும் இறுதி வேட்பாளர் பட்டியல்