மதுரை: மதுரை மாவட்டம் குடிமைப்பொருள் வழங்கல் மேலாளராக பணிபுரிந்து வரும் சுகுமார், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி, பாளையங்கோட்டை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சுமார் 5 மணி நேரமாகச் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் மதுரையில் உள்ள அவர் தற்போது வசித்து வரும் அண்ணாநகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அன்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர் தற்போது மதுரையில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு துறை மண்டல மேலாளர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படுகிறது.
50 லட்சம் மதிப்பிலான சொத்து
சுகுமார் கணபதி 2015இல் இருந்து 2022 வரை 50 லட்ச ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சுதா தலைமையில் பாளையங்கோட்டையில் உள்ள அன்பு நகர் வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கலால் உதவி ஆணையாளராக சுகுமார் பணிபுரிந்தபோது அதிகமாக டாஸ்மார்க் கடைகளிலிருந்து லஞ்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை காலை 7 மணிக்குத் தொடங்கி இதுவரை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் பொழுதுபோக்கு பூங்கா விதிகள் உள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி