திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ‘அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நெல்லையில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுக கொறடா வேலுமணி என்னைச்சந்திக்க வேண்டும் என சட்டப்பேரவையில் உள்ள அலுவலகத்திற்கு வந்தார். ஆனால், நான் நெல்லை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததால், பின்னர் தொலைபேசியில் பேசுவதாகத் தெரிவித்தேன்.
அதிமுக கொறடா வேலுமணி, கடிதம் ஒன்றை எனது உதவியாளரிடம் கொடுத்துச்சென்றுள்ளார். நான் இதுவரை அந்த கடிதத்தை படித்துப்பார்க்கவில்லை. கடந்த வாரம் எதிர்க்கட்சித்துணைத் தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் எனக்கு ஒரு கடிதத்தைக் கொடுத்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது. எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதத்தை படித்துப் பார்த்து பரிசீலனை செய்வேன்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத்தலைவர் என்ற முறையில் ஜனநாயக முறைப்படி, சட்டப்படி, விதிப்படி நியாயமாக ஒருதலைப் பட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த முடிவாக இருந்தாலும் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் உட்பட்டபடி அமையும். தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் உள்பட அதிமுகவினர் அனைவரும் இரட்டை இலையில் இருந்து வெற்றி பெற்று வந்தவர்கள். மற்றபடி அனைத்தும் அவர்களது கட்சியின் உள் விவகாரம். துணைத் தலைவர் பதவி என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டுள்ளது என்பதை அவர்களது கடிதத்தின் மூலம் படித்துப் பார்த்து, சட்ட விதி என்ன கூறுகிறது என்று பார்க்க வேண்டும். வழக்கறிஞர் உள்ளிட்டவர்களுடன் ஆய்வு செய்து எதிர்க்கட்சி கொறடா வேலுமணி கொடுத்த கடிதம் குறித்து முடிவெடுக்கப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி துணைத் தலைவர் R.B.உதயகுமார்- இபிஎஸ் அறிவிப்பு