திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, உடன்குடி சாலையில் டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த தினகர் என்பவர் பார் நடத்திவருகிறார். இவரது மனைவி ஜெனிபர் திமுகவில் மகளிரணி அமைப்பாளராக உள்ளார். மேலும் வழக்கறிஞராகவும் பணிபுரிந்துவருகிறார்.
![காவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tvl-03-dmkwomenadvocate-threaten-police-audio-scrpt-7205101_05062021225057_0506f_1622913657_1012.jpg)
இந்த நிலையில், தினகர் சட்டத்துக்குப் புறம்பாகக் கள்ளச்சந்தையில் மது விற்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டிக்கும் திசையன்விளை காவலர்களை, அவரது மனைவி வழக்கறிஞர் என்ற திமிரில் மிரட்டிவருவதாகத் தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில் திமுக நிர்வாகி ஜெனிபர் திசையன்விளை காவலர் செல்லத்துரையை தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
காவலரை எச்சரிக்கும் ஜெனிபர்
அதாவது செல்லத்துரை, பிற காவலர்கள் ரோந்து செல்லும்போது தினகர் நடத்திவரும் பார் அருகில் சிலர் அறை குறை ஆடைகளுடன் மது அருந்தி உள்ளனர். இதையடுத்து தினகரை அழைத்து பொதுமக்களுக்கு இடையூறாக இதுபோன்ற நடந்துகொள்ள கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
இதை அறிந்த தினகரின் மனைவியும் திமுக நிர்வாகியுமான ஜெனிபர் காவலர் செல்லத்துரையை அழைத்து, "நான் வழக்கறிஞர், எனது கணவர் பார் நடத்திவருகிறார். என் கணவரிடம் பேசியது யார்?" என்றார்.
மேலும், "கடந்த நவம்பர் மாதம் திசையன்விளையில் ஷியாம் சுந்தர்னு ஒருத்தன் இன்ஸ்பெக்டரா வேலை பார்த்தான். அவன் இடமாற்றம் ஆகி போன காரணம் என்னன்னு கொஞ்சம் விசாரிச்சிக்கோங்க. உங்களை பகைக்க வேண்டும் என்று எண்ணம் கிடையாது.
இதே ஷியாம் சுந்தர் ஒருமுறை கடையில் வந்து பிரச்சினை செய்துவிட்டு என் வீட்டுக்காரரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். அடுத்த நிமிடமே அவன் என்ன பாடு பட்டான்னு அவரு டிரான்ஸ்பர்லயே புரிஞ்சிருக்கும். எஸ்.பி., இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன் அவரு எனக்கு தெரிஞ்சவருதான், டிஎஸ்பி கிட்ட பேசுறேன், சப்-கலெக்டரை வரச்சொல்றேன்" என்று பேசியுள்ளார்.
ஏற்கனவே காவலர்களை எச்சரித்த ஜெனிபர்
தன்னை எதிர்த்த ஆய்வாளரை தனது செல்வாக்கு மூலம் இடமாற்றம் செய்துள்ளதாகவும், எனவே தங்களை எதிர்த்தால் உங்களுக்கும் அதே நிலைதான் என்ற தொணியிலும் வழக்கறிஞர் ஜெனிபர் காவலரை மிரட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் இதே பாரில் ஏற்பட்ட பிரச்சினையின்போது ஜெனிபர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். அப்போதுகூட காவலர்களைத் தகாத சொற்களால் பேசிய ஆடியோ வெளியானது.
புதிதாக ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவரும் சூழ்நிலையில், திமுக பெண் நிர்வாகி ஒருவர் காவலரை தொலைபேசியில் பகிரங்கமாக மிரட்டும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிபரால் காவலர்கள் வருத்தம்
இது குறித்து திசையன்விளை காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, "டாஸ்மாக் கடை அடைத்திருக்கும் நேரத்தில் விதியை மீறி தினகர் தொடர்ந்து கள்ளச்சந்தையில் மது விற்றுவருகிறார்.
ஊரடங்கு நேரத்தில்கூட மது விற்கிறார். இதைத் தட்டிக் கேட்டால் அவரது மனைவியை வைத்து மிரட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்" என்றனர்.
இதையும் படிங்க: வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ' - ஆ. ராசா உருக்கம்