நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த செட்டிகுளம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் ஜோசப். இவரது மனைவி கல்யாணி. ஜோசப் இறந்த நிலையில் கல்யாணி தனது குழந்தைகளுடன் கல்யாணிபுரத்தில் வசித்துவந்தார். இவரது உறவினர் கருப்பசாமி, அவரது மனைவி இசக்கியம்மாள் ஆகிய இருவரும் கல்யாணியின் வீட்டருகில் குடியிருந்துவருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாத நிலை இருந்து வருகிறது. மேலும் கல்யாணிக்கும் இந்த தெருவில் வசிக்கும் பலருக்கும் சிறுசிறு பிரச்னைகள் மூலம் வாய்த்தகராறு ஏற்பட்டு பலருடன் பேசாத நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) மதியம் தெருவில் உள்ள அடி குழாயில் தண்ணீர் பிடிப்பதில் கல்யாணி மற்றும் இசக்கியம்மாள் ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு சண்டையாக மாறியது. இதனை சமரசம் செய்ய வந்த கருப்பசாமியையும் கடுமையாக கல்யாணி திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கருப்பசாமி மாலையில் மது அருந்திவிட்டு வந்து கல்யாணியிடம் சண்டையிட்டதாகவும் சண்டை முற்றவே அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அரிவாளால் வெட்டுப்பட்ட கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடிவருகின்றனர். மேலும், கல்யாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.