திருநெல்வேலி: கருப்பன் துறை புறக்காவல் நிலையம் முன்பு கூலித் தொழிலாளி ஒருவர், மர்ம நபரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது. இதைத்தொடர்ந்து கூலித் தொழிலாளியின் உடலை எடுக்கவிடாமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில், நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உடலை கைப்பற்றி விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
நெல்லை சந்திப்பு கருப்பன் துறை பகுதியைச் சேர்ந்தவர் சந்தியாகு(27). கட்டிடத் தொழிலாளியான இவர் நேற்று (டிச.25) கிறிஸ்துமஸ் விழாவை வீட்டில் உள்ளவர்களுடன் கொண்டாடிவிட்டு, கருப்பன் துறை பகுதியில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் முன்பு இருக்கும் கைப்பிடி சுவற்றில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த மர்ம நபர்கள் சந்தியாகுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சந்தியாகு உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நெல்லை சந்திப்பு போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள முயற்சித்தனர். அப்பொழுது, கூலித் தொழிலாளியின் உடலை எடுக்கவிடாமல், அங்கிருந்த அவரது உறவினர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: புகாரை விசாரிக்கத் தாமதம்: கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணகுமார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாகு மீது ஏற்கனவே கொலை முயற்சி வழக்கு இருப்பதால், முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இக்கொலை சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த யோசுவா(23) என்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருப்பன் துறை உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையம் முன்பே கிறிஸ்துமஸ் நாளில் இக்கொலை சம்பவம் நடந்திருப்பது அப்குதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புகாரை விசாரிக்கத் தாமதம்: கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..