நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் மின் உற்பத்தி தொடங்கி செயல்பட்டு வந்தது. இதிலிருந்து, 910 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.40 மணியளவில் அணு உலையில் உள்ள ஜெனரேட்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக, அணு உலையில் மின் உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு, இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் கூட்டாகச் சேர்ந்து பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 465 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முதலாவது அணு உலை கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி வருடாந்திரப் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டது. பின்னர், ஊரடங்கால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பராமரிப்பு பணிகள் மே 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு முதல் அணு உலை செயல்படத் தொடங்கியது.
பின்னர், கடந்த 12ஆம் தேதி முதல் அணு உலையில் பழுது ஏற்பட்டு சில மணி நேரங்களில் சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. முதல் அணு உலையிலிருந்து 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தந்தைக்கு நினைவஞ்சலி- கடைசி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா காந்தி