திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாங்குநேரியில் தேர்தல் என்றதும் 18 அமைச்சர்களும் வந்து செல்கின்றனர். இதுவரை மக்கள் பிரச்னையை தீர்க்க எத்தனை அமைச்சர்கள் வந்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.
கீழடி குறித்து, தமிழர்களின் தொன்மையை மறைக்கும் அளவிற்கு மத்திய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கீழடியில் நடக்கும் அகழ்வாராய்ச்சி தமிழரின் பெருமையை சொல்கிறது. ஆனால், மத்திய அரசு இது பாரதத்தின் பெருமை என்று வரலாறை திரித்து கூறுகிறது, இந்தத் தேர்தல் வழியாக மத்திய அரசுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், கரை வேட்டிகளால் தமிழ்நாடு கரைபடிந்துள்ளதாக கூறிய கமல்ஹாசனின் கேள்விக்கு, அரசியலில் திடீர் திடீரென்று வந்து புதிய கருத்துகளை சொல்லக்கூடிய ஒரு சிலருக்கு பதில் சொல்ல முடியாது. தமிழ்நாடு வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இருக்கக் கூடிய பெருமைக்கு திராவிட இயக்கங்களும், கரைவேட்டி கட்டிய கலைஞர் என்ற தமிழனும்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது, அரசியல் தெரிந்தவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்று கூறினார்.