தமிழ் கடவுளாக கருதப்படும் முருகன் குறித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் அவதூறான கருத்துகள் பரப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையானது.
இதற்கிடையில், தற்போது வரை கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து அமைப்புகள் பல்வேறு விதமான நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக இந்து மக்கள் மத்தியில் கந்தசஷ்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கந்தசஷ்டி கவசத்துக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் வகையில் இன்று (ஆகஸ்ட் 9) வேல் பூஜை நடத்த தமிழ்நாடு பாஜக மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதனடிப்படையில், நெல்லை மாவட்டத்தில் இன்று ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் முருகனின் ஆயுதமான வேலைக் கொண்டு பூஜை செய்தனர். தொடர்ந்து வீட்டின் வாசலில் நின்றபடி கந்தசஷ்டி பாராயணம் பாடினர். மேலும், பாஜக சார்பில் மூத்த ஆன்மிகவாதிகளால் கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது.
இதற்கிடையில் நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை பெய்த மழையைப் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடை பிடித்தபடி தொடர்ந்து கந்தசஷ்டி கவசத்தினைப்பாடி முருகனை வழிபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பலரும் கலந்துகொண்டு சஷ்டி கவசத்தை ஒன்றுசேர பாடினார்கள். நெல்லை சிந்துபூந்துறை சிவன் கோயில் அருகே நடைபெற்ற கந்த சஷ்டி வேல் பூஜையினை பாஜக விவசாய அணி மாநில பொதுச் செயலாளர், கணேஷ் குமார் ஆதித்தன் தொடங்கி வைத்தார்.